ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தால் 2 தங்க மோதிரம் கிடைக்குமா..?

 
1

ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் தாயையும் கௌரவிக்கும் விதமாக "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்" (Thaimaaman Thanga Mothiram Thittam) செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஒரே நேரத்தில் பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கு தனித்தனியாக தங்க மோதிரம் வழங்கப்படுமா? என்பது குறித்த அரசின் விளக்கத்தை இங்கே விரிவாக பார்க்கலாம்

இத்திட்டத்திற்கான தகுதி வரம்புகள், யார் விண்ணப்பிக்கலாம் மற்றும் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் தாய்மார்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

தமிழக முகவரி: விண்ணப்பதாரர் கண்டிப்பாக தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனை பிரசவம்: கர்ப்பிணித் தாய்மார்கள் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் (Government Institutions) பிரசவித்திருக்க வேண்டும்.

PICME பதிவு: பயனாளியான தாய் கண்டிப்பாக RCH ID உடன் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) மென்பொருளில் பதிவு செய்திருக்க வேண்டும்.

குழந்தை எண்ணிக்கை கட்டுப்பாடு இல்லை: இத்திட்டம் அனைத்துப் புதுப் பிறப்புகளுக்கும் பொருந்தும். எத்தனை குழந்தைகள் என்ற எண்ணிக்கைக் கட்டுப்பாடு இன்றி, 'Higher Order Births (HOB)' என்று சொல்லப்படும் கூடுதல் பிரசவங்களுக்கும் எந்தவொரு தடையுமின்றி இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் கிடைக்கும்? (திட்டத்தின் முக்கிய அம்சங்கள்):
பாலினப் பாகுபாடற்ற உதவி: இத்திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்கள் வழங்குவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற எந்தவொரு பாலினப் பாகுபாடும் கிடையாது. பிறக்கும் குழந்தையின் பாலினத்தைக் கடந்து அனைவருக்கும் இத்திட்டம் சமமாகப் பொருந்தும்.

ஒரு கிராம் தங்கம்: தகுதியான குடும்பங்களைச் சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும்.

 

தேவைப்படும் இருப்பிடச் சான்றுகள் (Residential Proof):

  • பயனாளிகள் தங்களின் இருப்பிடத்தை உறுதி செய்ய பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்:
  • ரேஷன் கார்டு (Ration Card)
  • வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card)
  • ஆதார் கார்டு (Aadhar Card)
  • தொழிலாளர் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை
  • அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட முகவரிச் சான்று அட்டை
  • இருப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate)

திட்டம் எப்போது முதல் அமலுக்கு வருகிறது?

அரசு மருத்துவமனைகளில் 22 ஜூன் 2026 முதல் பிறக்கும் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டமானது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முறைப்படி துவக்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கிடைக்குமா?

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம், தாய் மாமன் சீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றாலும், ஒரே நேரத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்கு தனித்தனியாக தலா ஒரு கிராம் தங்க மோதிரம் என இரண்டு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. இதற்கு அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதன்படி, ஒரே நேரத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்கு தனித்தனியாக தங்க மோதிரம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.