சொந்தமாக வீடு உள்ள நீங்கள் ஏன் அரசு பங்களாவில் இருக்கிறீர்கள் என நாங்கள் கேட்க முடியுமா? உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி..

 
1

திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களும் அரசு வழங்கும் காரைப் பெறப்போவதில்லை. தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சொத்து மதிப்பின் அடிப்படையில், உண்மையிலேயே நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த அதிரடி பதிலடி:

முதலமைச்சரின் நோக்கம் அவையில் உள்ள அனைவரும் சமம் என்பதுதான். ஏழை உறுப்பினர்கள் பேருந்தில் வந்து செல்வதைக் கருத்தில் கொண்டே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.வசதி உள்ளவர்கள் அல்லது விருப்பமில்லாதவர்கள் இதைப் பெறப் போவதில்லை; தேவைப்படுபவர்களே கேட்கப்போகிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்கெனவே சொந்தமாக 2, 3 வீடுகள் உள்ளன. ஆனால், அவரும் அரசு பங்களாவில்தான் தங்கியிருக்கிறார். எனக்கு அரசு பங்களா வேண்டும் என்று என்னிடம்தானே கடிதம் கேட்டார்? சொந்தமாக வீடு உள்ள நீங்கள் ஏன் அரசு பங்களாவில் இருக்கிறீர்கள் என நாங்கள் கேட்க முடியுமா?

நெறிமுறைகளின்படி (Protocol) அமைச்சர்களுக்கு வீடு, கார் மற்றும் உதவியாளர்கள் வழங்கப்படுவது போல, மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்களுக்கு கார் என்பது ஆடம்பரம் அல்ல; அது மக்களைச் சென்று சந்திப்பதற்கான அடிப்படைத் தேவை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்தார்.

கார் வழங்கும் விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி மற்றும் தேவைகள் குறித்து இரு தலைவர்களும் மாறி மாறிப் பேசிய இந்த விவாதம், அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு வழங்கும் வாகனப் பலன்களைப் பெற மறுத்து, அரசுச் செலவைக் குறைக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மக்கள் நலன் மற்றும் நிதி நிர்வாகத்தை முதன்மைப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஆதரவும் வரவேற்பும் குவிந்து வருகின்றன.