இதைவிட பெரிய பரிசு இருக்க முடியுமா?? - முதல்வரின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’..

 
இதைவிட பெரிய பரிசு இருக்க முடியுமா?? - முதல்வரின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’..

திட்டமிட்டு பரப்பப்படும் போலிச் செய்திகள்,  தொடர்ந்து அதிகரிக்கும் சிலிண்டர் விலை , தில்லி துணை முதலமைச்சர் கைது உள்ளிட்ட பொதுமக்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ தொடரில் பதிலளித்துள்ளார்.

முதல்வரிடம் எழுப்பட்ட கேள்விகள் மற்றும் அவர் அளித்த பதில்கள், “

1. கேள்வி: உங்களுடைய எழுபதாவது பிறந்தநாளில், தொண்டர்கள் கொடுத்த பரிசுகளில் உங்கள் மனம் கவர்ந்த பரிசு எது?

பதில்: உங்களில் ஒருவனான என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அழகு பார்த்ததைவிட பெரிய பரிசு இருக்க முடியுமா?

2. கேள்வி: உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள்?

பதில்: ‘தோள் கொடுப்பான் தோழன்’ என்பதன் அடையாளம் அவர்கள்!

திமுக கூட்டணி

3. கேள்வி: கிராமப்புறப் பெற்றோர், மாணவ, மாணவியரிடம் “நான் முதல்வன்” திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா?

பதில்: நன்றாக ஏற்பட்டிருக்கிறது! கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கபட்டதிலிருந்து இந்த ஆண்டு மார்ச் 1 வரை தமிழ்நாட்டிலுள்ள 1300 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்தத் திட்டமே அனைத்து மாணவர்களுக்குமானதுதான். நகர்ப்புற மாணவர்களாவது பயிற்சி மையங்களுக்கு போகின்ற வாய்ப்பு அதிகம். கிராமப்புற மாணவர்களுக்குத்தான் 'நான் முதல்வன்' திட்டமானது அதிகமாகத் தேவை. தமிழக இளைஞர்கள் அனைவரும் நான் முதல்வன் எனச் சொல்ல வைக்கும் இந்த திட்டத்தை, எனது தொடர் கண்காப்பில் வைத்திருக்கிறேன்.

4. கேள்வி: ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே? ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆளுநர்கள் இதற்கு செவிமடுப்பார்கள் என நினைக்கிறீர்களா?

பதில்: இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால், ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது.

இதைவிட பெரிய பரிசு இருக்க முடியுமா?? - முதல்வரின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’..

5. கேள்வி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே மிரட்டுகிறது பாஜக என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது. தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அவர்களது கைது கண்டிக்கத்தக்கது. பிரதமருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதி இருக்கிறேன். எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக வெல்லலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்க கூடாது.  

6. கேள்வி: நேற்று மகளிர் தினம். மகளிருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: நிமிர்ந்த நன்னடை - நேர்கொண்ட பார்வை - நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிச்சல் கொண்டவர்களாக மகளிர் அனைவரும் உயர வேண்டும் என்பதே எனது எண்ணம். அனைத்து மகளிரும் படிக்கவேண்டும், உயர்கல்வியைப் பெற வேண்டும். உரிய வேலைகளுக்குச் செல்ல வேண்டும். திருமணம் - குழந்தைகள் - குடும்பம் ஆகியவற்றோடு நிறைவடைந்துவிடாமல், சமூகப் பங்களிப்பைத் தங்கள் வாழ்நாள் முழுக்கச் செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பெண்களுக்கு நான் சொல்வதைவிட, ஆண்களுக்கு ஒரு அறிவுரை சொல்ல நினைக்கிறேன்... பெண்களைக் குறித்த ஆண்களின் பார்வையில் மாற்றம் வேண்டும் - இதுதான் ஆண்களுக்கு நான் சொல்லும் அறிவுரை.