பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு கொண்டு வரலாமா? - சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி 'செக்'..!

 
1

மீஞ்சூரை சேர்ந்த தமிழரசன், ராஜேஷ்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆந்திர மாநிலத்தில் இருந்து 3.4 லிட்டர் மதுபானத்தை விற்பனை செய்ய கொண்டு வந்ததாக, எளாவூர் சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசாணையின்படி, 4.5 லிட்டர் வரை மதுபானத்தை தனிநபர் பயன்பாட்டிற்காக வைத்திருக்கலாம் என கூறுகிறது. தாங்கள் கொண்டு வந்த மதுபானம் தங்களின் சொந்த பயன்பாட்டிற்கு என்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் மாநிலத் தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னாவின் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை, நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று (ஏப். 29) மீண்டும் வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ‘தமிழக விதிகளின்படி 3.4 லிட்டர் மதுபானம் மட்டுமே கொண்டு வந்ததாகவும், நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் மற்றும் 4.5 லிட்டர் தனிப்பயன்பாட்டு விலக்கு அடிப்படையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா, ‘4.5 லிட்டர் விலக்கு என்பது தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் மதுபானங்களுக்கு எந்த வகையிலும் பொருந்தாது. இதற்கான விளக்கங்களை உள்துறை செயலாளர் ஏற்கனவே வழங்கியுள்ளார்’ என வாதாடினார்.

மேலும், முந்தைய தீர்ப்புகள் இந்த அம்சத்தைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டதாகவும், அவை இவ்வழக்கிற்கு பொருந்தாது என்றும் தெரிவித்தார். அத்துடன், புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 4.5 லிட்டர் வரை மதுபானம் கொண்டு வரலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார், 4.5 லிட்டர் தனிப்பயன்பாட்டு விலக்கு அரசாணை என்பது தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தீர்ப்பளித்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.