ஈரோட்டில் அனுமதியின்றி பிரச்சாரம்- நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்குபதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியினர் பிரச்சாரம் துவங்கிய நிலையில், அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5.ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைய உள்ளது. திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இறுதி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனிடையே, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் நிர்வாகிகள் பதாகைகளை ஏந்தி சாலையோரம் நின்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு பேருந்து நிலையம் அருகே வ உ சி பூங்கா சாலையில் தட்டிகளை கைகளில் ஏந்தி நின்றவாறு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர்.
இந்நிலையில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் மூன்று பேர் மீதும் , ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் நமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உருவபடம் கொண்டு பிளக்ஸ் பேனர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வைத்திருந்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், BNS சட்ட பிரிவு 171 .ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.