புகார் அளிக்க 104-ஐ அழையுங்கள்! – அரசு மருத்துவமனையில் பணம் வசூலித்தால் அதிரடி நடவடிக்கை.

 
1

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்

எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனை மாநிலத்தின் மிகப் பழமையான மற்றும் முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். மருத்துவமனையின் வார்டுகள், மருத்துவ சேவைகள் மற்றும் நோயாளிகளுக்கான வசதிகள் குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கியுள்ளார். நீண்ட கால தொலை நோக்கு திட்டத்துடன் ஒருங்கிணைந்த மருத்துவ வளாகம் உருவாக்கப்படும் என்றார்.

மருத்துவமனையில் குழந்தைகளை பார்ப்பதற்காக அல்லது சிகிச்சை தொடர்பாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்ட போது, "அத்தகைய புகார்கள் இருப்பதை மறுக்க முடியாது. அதை ஒப்புக் கொள்ள வேண்டியது தான். யார் பணம் கேட்டாலும் அவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் சிலர் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை மறுக்க முடியாது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் பொது மக்களிடம் எந்த விதத்திலும் பணம் வசூலிக்கக் கூடாது என்றும் , மருத்துவமனை ஊழியர்கள் யாரேனும் பணம் கேட்டாலோ அல்லது வற்புறுத்தினாலோ பொதுமக்கள் 104 என்ற உதவி எண்ணில் புகார் அளிக்கலாம். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

காப்பீட்டு அட்டை இல்லாத காரணத்தால் எந்த நோயாளிக்கும் சிகிச்சை மறுக்கப் படக் கூடாது. அரசு மருத்துவ சேவை என்பது மக்களின் அடிப்படை உரிமை.

மேலும், மருத்துவமனையில் கூடுதல் கழிவறைகள், கூடுதல் வார்டுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் , சுகாதாரமான உணவு மற்றும் தேநீர் வழங்கும் வசதி அவசியம் இருப்பதாகவும், இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும்.