நவ. 13ம் தேதியே மாணவர்களுக்கு கேக்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 
விஜய் கேக் வெட்டி

குழந்தைகள் தினத்தை கொண்டாட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் என 61.84 லட்சம் பேருக்கு கேக்குகள் விநியோகிப்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். 

வரும் 13ம் தேதி பள்ளிகளில் கொண்டாடப்படும் குழந்தைகள் தின விழாவில் மாணவர்களுக்கு கேக் வழங்க வழிகாட்டுதல்களை வழங்கியது கல்வித்துறை. 61.84 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் 25 கி. எடையுள்ள 2 மினி ஸ்விஸ் ரோல் கேக் வழங்கபடவுள்ளது.  கேக் வைக்கப்படும் இடம் சுத்தமாக, தூய்மையாக இருக்க வேண்டும். கேக் மீது Not For Sale என்ற வாசகம் இடம் பெற வேண்டும். உணவு ஒவ்வாமை அல்லது உணவுக் கட்டுப்பாடு உள்ள மாணவர்களை முன் கூட்டியே கண்டறிந்து தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கேக்கை மாணவர்கள் கைகளைக் கழுவிய பின்னர் பெற வேண்டும், விநியோகம் ஒழுங்காகவும், சமமாகவும் நடைபெற வேண்டும், எந்த மாணவரும் விடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய நாளன்று வருகை புரியாத மாணவர்களுக்கான கேக்குகளை பாதுகாப்பாக வைத்து, அவர்கள் பள்ளி வரும் நாளில் வழங்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து அட்டை கிடைத்துள்ளதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.