தமிழக அமைச்சரவையில் மாற்றம்? - முதலமைச்சர் விளக்கம்..
தமிழக அமைச்சரவையில் மாற்றம் என்று வெளியான தகவலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ம் தேதி அமெரிக்கா செல்ல இருக்கிறார். அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும், 3 மூத்த அமைச்சர்கள் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்கிற தகவலும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் கூறபட்டு வந்தது. இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக வெளியான தகவலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். சென்னையில் தரம் உயர்த்தப்பட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கே தகவல் வரவில்லை’ என்று பதிலளித்தார்.