இன்று முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..
முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னையில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8ம் தேதி உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வருகிற 27ம் தேதி முதலமைச்சர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். பல்வேறு தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளை சந்திப்பதோடு, அமெரிக்க வாழ் தமிழர்களையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (13ம் தேதி) நடைபெற இருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. அத்துடன் முதல்வர் வெளிநாடு செல்லும் முன் அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியது வழக்கமான நடைமுறை ஆகும். ஆகையால் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வரின் வெளிநாடு பயணத்திற்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.
மேலும், புதிதாக தொடங்கப்பட இருக்கும் வளர்ச்சி திட்டங்கள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. அத்துடன் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே உதயநிதி வரும் 19ம் தேதிக்கு மேல் துணை முதலமைச்சர் ஆகலாம் என பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார். ஆகையால் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.