பொங்கல் பண்டிகையன்று சிஏ தேர்வுகள்- மோடி அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு
தமிழர் திருநாள் பண்டிகையான பொங்கல் தினத்தில் சி.ஏ தேர்வுகளை வைத்துள்ளது மோடி அரசுக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ICAI) சிஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற உள்ளன.
நாட்டின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் சிஏ தேர்வுகள் தமிழகத்தில் 28 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தேர்வுகளுக்கு இடைவிடாது தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு, தேர்வுகள் நடைபெறும் தேதி அட்டவணை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்பி சு.வெங்கடேசன், “பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு.சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
“அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வால் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஒட்டுமொத்த தமிழக மக்களின் தனிப்பெரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர். எனவே, தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.