தவெகவில் இணைந்தால் உறுதுணையாக இருப்போம் - சி.விஜயபாஸ்கருக்கு ஆதரவாளர்கள் ஏகமனதாக தீர்மானம்!

 
1

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக 108 இடங்களில் வென்ற நிலையில், கடந்த மே 10-ம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பழனிசாமி தரப்பில், பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர்.

சி.வி.சண்முகம், சி.விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்த நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவரிடம் பழனிசாமி தரப்பு சார்பில் கடிதம் அளிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் பேரவைத் தலைவரை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்த விஜய பாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக பேரவைத் தலைவரும் அறிவித்துள்ளார்.

பதவியை ராஜினாமா செய்த அவர் திமுக-வில் இணைவாரா? தவெக-வில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் தவெக-வில் இணைவார் என்றே தகவல்கள் வெளியாகியது. இந்த சூழலில், அந்த தகவல் ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சர் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் தவெக-வில் இணைந்தனர். ஆனாலும், அவர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையிலே இணைந்தனர். ஆனால், விஜயபாஸ்கர் மிகவும் செல்வாக்கான நபராக புதுக்கோட்டையில் திகழ்வதால் அவர் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் முன்னிலையிலே இணைவார் என்று கருதப்படுகிறது. 

மேலும், தனது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் விஜயபாஸ்கர் தவெக-வில் இணைய திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அவரது ஆதரவாளர்கள் புதுக்கோட்டையில் நடத்திய கூட்டத்தில் விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்தால் அதற்கு முழு மனதுடன் ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்தால் தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தவெக சார்பில் விராலிமலை தொகுதியில் அவர்கள் களமிறங்குவார் என்றே கருதப்படுகிறது. விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்தால் தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தவெக சார்பில் விராலிமலை தொகுதியில் அவர்கள் களமிறங்குவார் என்றே கருதப்படுகிறது. அவ்வாறு அவர் களமிறங்கி வெற்றி பெற்றால் அவருக்கு தவெக அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.