வாக்குக்கு பணம், பொருட்கள் கொடுக்கின்றார்களா? உடனே இந்த ஆப்பில் சொல்லுங்க!
தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் சி விஜில் செயலி மூலமாக புகார் அளிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் 'சி-விஜில்'எனும் செயலி மூலமாக புகார் அளிக்கலாம். இந்தச் செயலியை (c -VIGIL) ‘ஸ்மார்ட் போன்’ வைத்திருப்பவர்கள் ‘கூகுள் பிளே ஸ்டோர்’ அல்லது தேர்தல் ஆணையம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செயலாம். அதில், அலை பேசி எண், பெயர், முகவரி, மாநிலம், மாவட்டம், பின்கோடு ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதை தாங்கள் அறியநேர்ந்தால், அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, உரிய ஆதாரத்துடன் செயலியில் பதிவு செய்து, புகார் தெரிவிக்கலாம்.
இந்நிலையில், தகவல் கொடுப்பவர் தனது பெயர் விவரத்தை வெளியிடாமல் ரகசியம் காக்கவிரும்பினால் அதற்கான வசதியும் அதில் உள்ளதாகவும், புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது 100 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார் கொடுத்தவரின் அலைபேசி எண்ணிற்கு நடவடிக்கை எடுத்த பின் அது தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

