'உலகின் பணக்காரர் TO ஜீரோ' - பைஜூ ரவீந்திரனுக்கு இந்த நிலைமையா?

 
tn

கடந்த 2011 ஆம் ஆண்டு பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு ஆன்லைன் எட்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியது பைஜூஸ். தினசரி பள்ளிக்கு சென்று கல்வி கற்று வந்த வேளையில் கொரோனா என்ற கொடிய நோய் உலகையே புரட்டி போட்டது.  அப்போது இணைய கல்வி என்ற பெயரில் தொடங்கப்பட்ட பைஜூஸ் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.  இன்றைய கல்வி உலகில் மாபெரும் நிறுவனமாக பைஜூஸ் நிறுவனம் தன்னை மேம்படுத்திக் கொண்டது . இதன் எதிரொலியாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இடம் பிடித்தார் பைஜூஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன்.

ஆனால் இந்த நிலைமை அப்படியே தலைகீழாகி விட்டது . ஊழியர்கள் பணி நீக்கம் , வருவாய் இழப்பு , கடன் சுமை என அடுத்தடுத்து பைஜுஸ் நிறுவனத்திற்கு அடிமேல் அடி விழுந்தது.  அமலாக்கத்துறை சோதனை முதலீட்டாளர்களுடன் பிரச்சனை என தொடர் சர்ச்சைகளில் சிக்கி பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் பைஜூ ரவீந்திரனின் தலைவிதி மாறிப்போனது.  கடந்த 2011 முதல் 23ஆம் ஆண்டு வரை 28 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை இந்நிறுவனம்  பெற்றுள்ளது.

tn

 நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு byju's நிறுவனம் ரூபாய் 9754 கோடியை அனுப்பி உள்ளது.  944 கோடியை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக இந்நிறுவனம் செலவு செய்துள்ளது . அந்நிய முதலீடுகள் தொடர்பாக போதுமான ஆவணங்களை இந்நிறுவனம் சமர்ப்பிக்க தவறியதன் மூலம் அந்த நிறுவனம் ரூ. 9,362 கோடிக்கு அந்நிய செலவாணி மோசடி ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது இதனால் அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் எதிரொலியாக பல சவால்களை இந்நிறுவனம் சந்திக்க தொடங்கியது.  நிதி கணக்குகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்ய தவறியது,  கடனுக்கான வட்டி தொகையை செலுத்தாதது  என இந்த நிறுவனத்தின் மீது வழக்குகள் தொடரப்பட்டன.  அத்துடன் அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர் அரை பில்லியன் டாலர்களை வைத்து நிறுவனம் மறைத்தது என்றும் குற்றம் சாட்டினர் . கடந்த ஆண்டு 22 பில்லியன் டாலராக இருந்த பைஜூஸின் மதிப்பீடு இந்த ஆண்டு 5.1 பில்லியன் டாலராக குறைந்தது.  தொடர் குற்றச்சாட்டுகளால் முதலீட்டாளர்கள் பின்வாங்கினர்.  இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.  ஒரு கட்டத்தில் பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்திற்கு வாடகை செலுத்த கூட முடியாத சூழலில் இந்நிறுவனம் அங்கிருந்து காலி செய்தது கவனிக்கத்தக்கது.

tn

இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று என்னவெனில், ஒரு வருடத்திற்கு முன்பு பைஜு ரவீந்திரனின் நிகர மதிப்பு ₹ 17,545 கோடி ($2.1 பில்லியன்) மற்றும் அவர் பல மதிப்புமிக்க 'உலகின் பணக்காரர்' பட்டியல்களில் இடம்பெற்றிருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் பில்லியனர் இன்டெக்ஸ் 2024 இன் படி,  ரவீந்திரனின் நிகர மதிப்பு பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது என்பது கூடுதல் தகவல் .