5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்- முதல்வர் விஜய் அவசரமாக கோர்ட்டு சென்றது ஏன்?

 
vijay

முதல்வர் விஜய் வெற்றிபெற்றுப் பிறகு ராஜினாமா செய்துவிட்ட திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்ற உறுப்பினர்களின் வெற்றியை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட செப்டம்பர் 8ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். இந்தத் தடை உத்தரவுக்கான அவகாசம் முடிய இன்னும் 11 நாள்தான் இருக்கிறது. அதேசமயம், இடைத்தேர்தல் நடத்த நவம்பர் 4-ம் தேதி வரை அவகாசம் உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், இடைத்தேர்தல் அறிவிப்பதற்கான தேதியைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யவில்லை; அதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை. ஆனாலும், முதல்வர் விஜய்யே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக் காட்டி செப்டம்பர் 8-ந்தேதி மீண்டும் சில வாரங்களுக்கு 5 தொகுதிகளின் இடைத்தேர்தலை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தால் அது தவெகவுக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேதியை அறிவிக்கும் நாள் வரை, தடை உத்தரவு நீடித்தபடியே இருந்தால், தேர்தல் வழக்கு இல்லாத காலியாக இருக்கும் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்குத்தான் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன் வரும்.

ஆனால், இந்த 2 தொகுதிகளை விட , தான் வெற்றிப்பெற்ற திருச்சி கிழக்கு மற்றும் தவெகவில் இணைந்து விட்ட  கரூர் விஜயபாஸ்கர், விராலி மலை விஜயபாஸ்கர் ஆகியோரின் தொகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் இடைத்தேர்தல் நடந்தாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு முதல்வர் விஜய்யிடம் அதிகமாக இருக்கிறது. ஆனால், தேர்தல் வழக்கை காரணம் காட்டி எங்கே இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வராமல் இருந்து விடுமோ என ஆலோசிக்கப்பட்டதன் அடிப்படையில் தான் விஜய் பெயரிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. முதல்வரின் நேரடி தலையீட்டை வெளிப்படுத்தும் வகையிலும் அவரது பெயரில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால், செப்டம்பர் 8-ந்தேதி தேர்தல் வழக்கு விசாரணைக்கு வரும் போது இந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்காது என்றே முதல்வர் விஜய் கருதுகிறார்.