இந்த வருடத்திற்கு பிறகு தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு வேலை இருக்காது - அண்ணாமலை..!

 
1

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:இந்த உலகத்தில் கடந்த மூன்று மாதங்களில் முக்கியமான இரண்டு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தி.மு.க.,வில் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இது ஒரு தலைமுறை மாற்றம். நடிகர் விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளால் தமிழக அரசியல் முழுமையாக மாற்றம் பெறும்.
 

கூட்டணி ஆட்சி, கூட்டணி மாற்றம் என மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 

உதயநிதி பதவியேற்றது என்பது நாங்கள் செய்வது குடும்ப அரசியல்தான் என்பதை எந்தவித கூச்சமும் இன்றி தெள்ளத் தெளிவாக அவர்கள் காட்டி இருக்கின்றனர். ஸ்டாலின் பதவிக்கு வந்ததற்கும், உதயநிதி பதவிக்கு வந்ததற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
 

அரசியலுக்கு வரமாட்டேன் என்ற உதயநிதி அரசியலுக்கு வந்தார்; வேகமாக எம்.எல்.ஏ., ஆனார், அதே வேகத்தில் அமைச்சருமானார்; இன்னும் வேகமாக துணை முதல்வரும் ஆகியிருக்கிறார். ஒருவரை உயர்த்துவதற்காக ஒரு கட்சியே வேலை செய்வது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.
 

பதவி பெறுவதற்கு ஒருவர் பத்து ஆண்டுகள், 20 ஆண்டுகள் களத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்பதை உதயநிதியின் பதவி உயர்வு உடைக்கிறது.உதயநிதி தனித்திறமையால் தான் தி.மு.க., எம்.எல்.ஏ., ஆனார் என்பதை நான் ஏற்க மாட்டேன். அந்த தொகுதியில் தி.மு.க., சார்பில் யார் என்றாலும் ஜெயிப்பார்கள்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நடத்துவதோ, ஃபார்முலா கார் பந்தயம் நடத்துவது அவரது சாதனை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன். ஒரு மாஸ் நடிகர், தன் துறையில் உச்சத்தில் இருப்பவர் வந்திருக்கிறார்; அவரை வாழ்த்தி வரவேற்க வேண்டும். இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

நிறைய பேர் வரும்போதுதான் தற்போதுள்ள நிலை உடையும். அரசியல்வாதியாக பா.ஜ., கட்சியை பார்க்கும்போது விஜயின் மனநிலை மாற வாய்ப்பு உள்ளது.தமிழக அரசியலில் பா.ஜ., வுக்கான காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது. விஜய் வரட்டும். நிறைய ஓட்டு பிரியட்டும்.
 

எனக்கும் சீமானுக்கும் பல விஷயங்களில் நிறைய கருத்து வேறுபாடு உள்ளது. இருவருக்கும் அடிப்படை எண்ணம் தமிழ்நாடு அரசியல் மாற வேண்டும் என்பதுதான். விஜய் கட்சியின் பின்னணியில் பா.ஜ, தான் இருக்கிறது என்று தி.மு.க.,வினர் கூறுவதை ஏற்க மாட்டேன். எங்களுக்கு வேறு வேலை இல்லையா? அவர் சுயமாக யோசித்து அரசியலுக்கு வருவதற்கு பா.ஜ., தான் காரணமா?
 

உதயநிதிக்கு இத்தனை தலைவர்கள் கூஜா தூக்கும்போதே மக்கள் புரிந்து கொள்வார்கள்; இது ஜனநாயக முறையிலான கட்சி இல்லை என்று தெரிந்து கொள்வர். விஜயும் நாங்களும் வேறு வேறு பாதைகளில் சென்று கொண்டிருக்கிறோம்; இரண்டும் வித்தியாசமான பாதை. சீமானும் அதே போல தான். கூட்டணிக்கு வாய்ப்பில்லை.
 

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த சித்தாந்தங்கள் காலாவதி ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை தேர்தல்கள் பறைசாற்றுகின்றன. தமிழகத்தில் 2026 என்பது கூட்டணி ஆட்சி தான். ஒரு திராவிட கட்சி ஓட்டு சதவீதம் 12க்கு கீழே குறைய வாய்ப்புள்ளது. அதன் தொண்டர்கள் எல்லோரும் வெளியே வருவர். அது காலத்தின் கட்டாயம். அது எந்த கட்சி என்பது உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன். வரும் 2026 தேர்தலில் இந்த சரிவு ஆரம்பமாகும்; 2031ல் தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு வேலை இருக்காது.
 

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.