தவெக முதல் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் - புஸ்ஸி ஆனந்த் உறுதி..
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழியேற்று, பின்னர் இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அமைந்திருந்த கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். தொடர்ந்து அன்றைய தினமே கட்சியின் பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து விழா மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், கட்சி அறிவிக்கப்பட்ட போதிலிருந்தே அனைவரும் எதிர்பார்த்திருப்பது மாநில மாநாட்டிற்காகத்தான். அதறான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் எங்கு, எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படும். மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும், கொடிக்கான விளக்கமும் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனையொட்டி தவெக மாநாடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
மாநாட்டிற்காக மதுரை, சேலம், திருச்சி என பல மாவட்டங்களில் இடங்கள் தேர்வு செய்ய கட்சி நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே செப்டம்பர் 23ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தவெக மாநாட்டிற்கு பாதுகாப்புக் கோரி விழுப்புரம் காவல் துறையிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.
இதனிடையே, விஜய்யின் தவெக மாநாடு தேதியை மாற்றி வைப்பது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை அனுகியுள்ளதாகவும், இந்த மாதத்தில் வேறு தேதி கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாட்டை தள்ளி வைக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
அத்துடன் மாநாட்டுக்கு அனுமதி கோரியது தொடர்பாக பரிசீலனை செய்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட போலீஸார் 21 கேள்விகள் கேட்டு அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த 21 கேள்விகள் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக சட்டப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ந்தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் என்று கட்சியினரிடம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உறுதிபட தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.