ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி..!

 
1

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதே சமயம், காவிரியின் குறுக்கே அணை கட்டியே ஆகவேண்டுமென கர்நாடக அரசும், கன்னட அமைப்புகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில், காவிரி நீரை தமிழகத்திற்கு திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தியும் கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் வரும் 13ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு கர்நாடக அரசு கேட்டுக்கொண்டது. இருப்பினும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென கன்னட கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னட விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லை. எனவே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தினார். மேலும் மேகதாதுவில் அணை கட்டியே ஆகவேண்டுமெனவும் கண்டிப்பாக தெரிவித்தார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 10ஆம் தேதியான இன்று காலை 11 மணிக்கு கர்நாடக - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, இன்று தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவுக்கு செல்கிற அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்களை தடுத்து நிறுத்த இருப்பதாகவும், தமிழ்நாட்டு வாகனங்களை கர்நாடகாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் இன்று தமிழ்நாடு பேருந்துகள் கர்நாடகாவுக்குள் நுழைய முடியுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காலை 9:30 மணி முதல் ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் மற்றும் கர்நாடக மாநில அரசுப் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.