கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க முடியாது- ஆம்னி பேருந்து சங்கத் தலைவர்
கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க முடியாது என ஆம்னி பேருந்து சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் இன்று முதல் தடை செய்யப்படுகிறது, கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக செயல்படும். ஏற்கனவே இம்மாதம் 24 ஆம் தேதி பிறகு நாங்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்படுவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உத்தரவாதம் கொடுத்தனர். ஆகையால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றார் போல் அரசு செயல்பட முடியாது, மக்களுக்கு ஏற்றார் போல் தான் அரசு செயல்படும்” எனக் கூறினார். இதனிடையே இன்றிரவு முதல் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் RED BUS, ABHI BUS போன்றவை பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் தேவையான மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உரிய தகவல் வழங்காமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம்னி பேருந்து சங்கத் தலைவர் அன்பழகன், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டுவரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின் ஆம்னி பேருந்துகளை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ள வரதராஜபுரம் பேருந்து நிலையம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.