"கால்வாயில் கவிழவிருந்த பேருந்து..." – 50 உயிர்களை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுநர்..!
கோவை குனியமுத்தூர் சாலை, சுண்ணாம்புக் கால்வாய் பேருந்து நிறுத்தம் அருகே 66-ஆம் எண் கொண்ட அரசு பேருந்தை மார்ட்டின் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதுடன் மாரடைப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாகச் சென்றுள்ளது. மேலும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பேருந்து மோதியுள்ளது. அப்போது, பேருந்து மோதியதில், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஆட்டோவில் பயணம் செய்த பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்த கரும்புக்கடை காவல் துறையினர் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஆட்டோவில் பயணம் செய்து காயமடைந்த இருவரையும், பேருந்து ஓட்டுநரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, பேருந்து ஓட்டுநர் மார்ட்டின் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, விபத்துக்குள்ளான அரசு பேருந்தை போக்குவரத்துக் காவலர்கள் அப்புறப்படுத்தி, போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தனர். ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால், குனியமுத்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் நிலவியது.
முன்னதாக, பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டு, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக சென்ற போது, பேருந்தில் இருந்த நடத்துநர் பரமேஸ்வரன் துரிதமாக செயல்பட்டு, பேருந்தை நிறுத்தினார். இதனால் பேருந்து அருகில் உள்ள கால்வாயில் கவிழாமல் தப்பித்து, பேருந்தில் இருந்த அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.

