பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதுடன் பயணியுடன் வாக்குவாதம்- ஓட்டுநர் பணி நீக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தாமல் பயணியை அடாவடியாக பேசிய ஓட்டுனரின் வீடியோ காட்சி வெளியானதன் எதிரொலியாக அரசு பேருந்தின் தற்காலிக ஓட்டுநர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் சுமார் மூன்று கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அழகு நாச்சியம்மன் கோயிலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பேருந்துகள் செயல்பட்டு வருகிறது. தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் மூடப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தில் நின்றுவிட்டு பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இந்நிலையில் திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதிக்கு செல்லும் திருப்பத்தூர் பனிமணைக்கு சொந்தமான 13ம் எண் பேருந்தின் ஓட்டுநர் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்காது, பொன்.புதுப்பட்டியில் தான் நிற்கும் என கூறி பேருந்தின் கதவை மூடி ஓட்டிச் சென்றுள்ளார். அதனை பேருந்தில் பயணம் செய்த பயணி வீடியோ எடுக்கும் பொழுது வீடியோ எடுத்து என்ன செய்யப் போகிறாய்? போய் மேனேஜரிடம் கேளுங்கள் என்று தெனாவட்டாக கூறியதோடு சுமார் பத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பொன்.புதுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். எனவே பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்று பயணிகளை அலைக்கழித்த ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளையும் நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
#JustNow | பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்து.. ஏன் பேருந்தை நிறுத்தவில்லை எனக் கேட்டு பயணி வாக்குவாதம் செய்த வீடியோ வெளியான நிலையில், ஓட்டுநர் பணி நீக்கம்; நடத்துநர் பணியிடை நீக்கம்
— Polimer News (@polimernews) May 4, 2025
#Pudukkottai | #GovtBus | #Driver | #Conductor | #PolimerNews pic.twitter.com/PRJdakF088
இந்நிலையில் திருப்பத்தூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு சென்ற அரசுப் பேருந்து பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் ஏன் நிறுத்தவில்லை என கேள்வி கேட்ட பயணியை அரசுப் பேருந்தின் தற்காலிக ஓட்டுநர் அடாவடியாக பேசிய காட்சி வெளியானதன் எதிரொலி அரசு பேருந்தின் தற்காலிக ஓட்டுனர் செல்லையா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த பேருந்தின் நடத்துனர் ஆண்டிச்சாமி பணியிடை நீக்கம் செய்து காரைக்குடி போக்குவரத்து பணிமனை பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டார்.


