போதையில் தள்ளாடிய அரசு பேருந்து நடத்துநர்- பயணிகள் அவதி

 
நடத்துனர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பணி நேரத்தில் மது போதையில் இருந்த அரசு பேருந்து நடத்துனரால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பாபநாசம் பணி மனைக்குட்பட்ட தடம் எண் 21E ஆலங்குளம் - முத்துமாலைபுரம், ஆலங்குளம் - சுரண்டை மற்றும் ஆலங்குளம் - பாபநாசம் ஆகிய தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து, இரவு 7 மணிக்கு ஆலங்குளத்தில் இருந்து புறபட்டு சுரண்டை சென்று அங்கிருந்து மீண்டும் 8.45 மணிக்கு ஆலங்குளம் வந்து பாபநாசம் செல்ல வேண்டும். நேற்று இரவு அந்த பேருந்து சுரண்டை செல்லாமல் ஆலங்குளம் பேருந்து நிலையத்திலேயே நின்று கொண்டிருந்தது. 

இதுகுறித்து பயணிகளிடம் விசாரித்த போது, நடத்துநர் முருகன் மது போதையில் தன்னிலை மறந்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க முடியாமல் பேருந்திலேயே இருந்ததுள்ளார். இதனால் ஓட்டுநர் பேருந்தை இயக்க மறுத்து நிறுத்தியிருந்தது தெரிய வந்தது. மேலும்  நடத்துநரிடம் பயணிகளிடம் வசூல் செய்த பணம் அடங்கிய கைப்பையும் இருந்தது. எனினும் இரவு 9 மணிக்கு பேருந்தை பணிமனைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் அதே நடத்துநருடன் பாபநாசத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட தாயாரானது. தவகல் அறிந்த பயணிகள், இந்த நடத்துநர் இருந்தால் பயணிக்க மாட்டோம் என கூறி இறங்கிச் சென்றனர். 

பின்னர் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் சின்னதுரை வந்து விசாரணை நடத்தி பணிமனை அதிகாரிகளிடம் பேசினார். இதையடுத்து மாற்று நடத்துநர் வந்த பின்னர் சுமார் 9.30 மணிக்கு பின் அந்த பேருந்து பாபநாசம் புறப்பட்டுச் சென்றது. பணி நேரத்தில் தன்னிலை மருந்து மது போதையின் உச்சத்தில் இருந்த நடத்துநரால் பயணிகள் அவதி அடைந்தனர்.