நடத்துனருக்கு நெஞ்சுவலி! மருத்துவமனைக்கு பறந்த பேருந்து! இறுதியில் நடந்த சோகம்

 
பேருந்து

கடலூரில் நடத்துநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து பயணிகளுடன் அரசுப் பேருந்து மருத்துவமனை சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி நடத்துநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக கரூருக்கு தினசரி காலையில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை புதுச்சேரியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்ஸில் டிரைவராக கோபால் என்பவரும், கண்டக்டராக கரூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள வாங்கல் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்(48) என்பவரும் பணியில் இருந்தனர். இந்த பஸ் காலை 8.45 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் வந்த போது டிரைவர், பயணிகள் யாராவது இறங்க வேண்டியுள்ளதா என கண்டக்டரிடம் கேட்டுள்ளார். அப்போது கண்டக்டர் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், உடனே பஸ்ஸை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் ஓட்டி சென்றார். பின்னர் பயணிகள் உதவியுடன் கண்டக்டரை இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பன்னீர்செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் பன்னீர்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பஸ்ஸில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ்ஸில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.