திருச்சியில் பெண்ணின் காலில் ஏறிய பேருந்து! பறிபோன 2 கால்கள்

 
Accident

திருச்சியில் பெண்ணின் கால்கள் மீது தனியார் பேருந்து ஏறியதில், அப்பெண்ணின் இரண்டு கால்களும் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா(45). இவர் இன்று மதியம் திருச்சி காந்தி மார்கெட் வெங்காயமண்டி அருகே மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்கின்ற தனியார் பேருந்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தார். அப்போது அந்த தனியார் பேருந்து ஓட்டுனர் அந்த பெண்னை கவனிக்காமல் பேருந்தை எடுத்துவிட்டார். இதனால் முன்பக்க படிக்கட்டில் தவறி விழுந்த நிர்மலாவின் இரண்டு கால்களிலும் பின்பக்க சக்கரங்கள் ஏறி இறங்கின.

வலியில் அலறி துடித்த அவரைக் கண்ட அப்பகுதி  மக்கள்  பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனவர்களை பிடித்து அடித்தனர். தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த நிர்மலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்களிடமிருந்து  ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழல் காணப்பட்டது.