அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், புதுசா பிறக்குற குழந்தைகளுக்கும் பம்பர் ஆஃபர்! முதலமைச்சர் விஜய்யின் மாஸ் அறிவிப்பு!
காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து முதல்வர் விஜய் செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜய் தலைமையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெற உள்ளனர்.
இதற்காக நடப்பு நிதியாண்டில் 217 கோடியே 63 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு 724 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும், மாணவர்களுக்கு சூடான, சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டத்தை முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளும் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், முதற்கட்டமாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மோதிரத்திற்கும் தனித்துவமான வரிசை எண்ணும், சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் வழங்கப்பட உள்ளது
இதனிடையே, தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள், PICME-யில் பதிவு செய்து RCH அடையாள எண் பெற்றிருந்தால் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
அதேவேளையில், ஜூன் 22 முதல் திட்டம் தொடங்கும் நாள் வரை பிறந்த குழந்தைகளுக்கு, 107 மையங்களில் தினமும் 100 குழந்தைகள் வீதம் செப்டம்பர் 28 முதல் மோதிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம் தொடங்கிய பின்னர், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போதே தங்கமோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தாய்-சேய் நலப் பாதுகாப்புடன், அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

