பட்ஜெட் 2026: தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா சீதாராமன்!

 
1 1

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும். இதன் மூலம் ஒரே பிரதமரின் கீழ் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், பிரதமர் மோடியின் 2-வது மற்றும் 3-வது ஆட்சிக்காலங்களில் தொடர்ந்து இந்த முக்கியப் பொறுப்பை வகித்து வருகிறார்.

இந்திய வரலாற்றில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்களின் பட்டியலில் மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் முதலிடத்தில் உள்ளார். இவர் வெவ்வேறு காலகட்டங்களில் மொத்தம் 10 முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக 1959 முதல் 1964 வரை 6 முறையும், பின்னர் 1967 முதல் 1969 வரை 4 முறையும் அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நிர்மலா சீதாராமன் இந்த முறை தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டின் மூலம், மொரார்ஜி தேசாயின் ஒட்டுமொத்த சாதனையை நெருங்குகிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்த மற்ற முக்கியத் தலைவர்களில் பி. சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் இடைவெளி விட்டு இந்தப் பணியைச் செய்துள்ளனர். அதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 1991 முதல் 1995 வரை நரசிம்ம ராவ் அமைச்சரவையில் தொடர்ச்சியாக 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தியாவின் முதல் பட்ஜெட் சுதந்திரத்திற்குப் பிறகு 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஆர்.கே. சண்முகம் செட்டி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அன்று தொடங்கிய இந்த நிதிப்பயணம் இன்று தொழில்நுட்ப மாற்றங்களுடன் காகிதமில்லா பட்ஜெட் (Digital Budget) என்ற நிலையை எட்டியுள்ளது. வரும் 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள இந்த 9-வது பட்ஜெட், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நிர்மலா சீதாராமனின் முத்திரையை மீண்டும் ஒருமுறை பதிக்கவுள்ளது.