"அப்பா, அம்மா, அக்காவை நல்லபடியாக பார்த்துக் கொள்”- தம்பிக்கு வீடியோ அனுப்பிவிட்டு அண்ணன் தற்கொலை
அந்தியூர் அருகே விரைப்பை வீக்க நோயால் அவதிப்பட்டு வந்த கல்லூரி மாணவர் தனக்கு உடல் ரீதியாக பாதிப்பு இருப்பதாகவும், தனது அக்கா, அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ளும்படி தம்பிக்கு வீடியோ அனுப்பி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பூனாட்சி, முகாசிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுடைய மூத்த மகனான கோகுல் (வயது 22), ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கோகுலுக்கு கடந்த சில வருடங்களாக விரைப்பை வீக்க நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோகுல் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு சிறிது நேரம் முன்பாக தன்னுடைய செல்போனில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கு இதுதான் என்னுடைய கடைசி பதிவு இனிமேல் வீடியோ போட மாட்டேன் எனவும் குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்திருப்பதுடன், தன்னுடைய குடும்பத்தினருக்கு தான் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் தனது தம்பியை அப்பா, அம்மா மற்றும் அக்காவை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுமாறு இருசக்கர வாகனத்தில் வெளியே செல்ல வேண்டாம் எனவும் நன்கு படித்து அரசு வேலை பெற வேண்டும் எனவும் கூறிவிட்டு அந்த வீடியோவை அவரது தம்பி செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வரும் நிலையில் குடும்பத்தினர் மற்றும் அப்பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


