மனைவியுடன் கள்ளஉறவு கொண்டவரின் இரு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற கொடூரன்

 
f

சேலம் அருகே 14 வயது தம்பியுடன் பிளஸ்-2 மாணவியை அவரது சித்தப்பாவே கழுத்தை அறுத்து  படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Image

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள கூட்டாறு கிராமம் ஒடுவன்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜா (40), இவரது மனைவி சித்ரா (38). இவர்களுக்கு நவீனா (17) என்ற மகளும், சுகன் (14) என்ற மகனும் இருந்தனர். குள்ளப்பநாயக்கனூரில் உள்ள பள்ளியில் நவீனா பிளஸ்-2வும், சுகன் 9ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று மாலை 6 மணியளவில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய நவீனாவும் , தம்பி சுகனும்  வீட்டிற்கு  அருகில்  உள்ள விவசாய தோட்டத்தில் அரளிப்பூ பறிப்பதற்காக  சென்றனர். சிறிது நேரத்தில் தோட்டத்தில் இருந்து அவர்களது அலறல் சத்தம் கேட்டது. இதனை கேட்டு அவர்களது தந்தை ராஜா, வேகமாக தோட்டத்திற்கு சென்றார். அப்போது  அங்கு மறைந்திருந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது சித்தப்பா மகனான தம்பி தனசேகரன் , திடீரென ராஜாவை தலையில் பலமாக ஓங்கி அடித்து தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனால் பதற்றமடைந்த ராஜா, பூச்செடிகளுக்கிடையே பார்த்தபோது, மகள் நவீனாவும், மகன் சுகனும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

அவர்கள் இருவரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற தனசேகரன்,  தன்னையும்  தாக்கிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அப்போது  ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு ,  மனைவி  சித்ராவும், அக்கம் பக்கத்தில் வசிப்போரும் தோட்டத்திற்கு வந்தனர். அவர்கள் ராஜாவை மீட்டு, உடனடியாக  சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளை கண்டு கதறி அழுதனர்.  இந்த இரட்டைக்கொலை பற்றி தகவல் அறிந்த பனமரத்துப்பட்டி இன்ஸ்பெக்டர் (பொ) பாலாஜிரமணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்றனர். தொடர்ந்து, சேலம் மாவட்ட எஸ்பி கௌதம்கோயல் தலைமையில் கூடுதல் எஸ்பி அண்ணாதுரை, சேலம் ரூரல் டிஎஸ்பி தேன்மொழிவேல் ஆகியோரும் சென்று, கொலையுண்டு கிடந்த அக்கா நவீனா, தம்பி சுகன் ஆகியோரது உடலை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

murder

தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து எஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.  அதில், ராஜாவிற்கும், பக்கத்தில் விவசாய நிலம் வைத்துள்ள சித்தப்பா மகனான தம்பி தனசேகரனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாகவும், அதனால் ராஜாவை பழிவாங்க அவரது இரு குழந்தைகளையும் கழுத்தறுத்து கொன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், இக்கொலையில் ஈடுபட்ட தனசேகரனின் மனைவியிடம் ராஜா தவறாக நடக்க முயன்றதாகவும், அதனால் இக்கொலை நடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கொலை தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ராஜாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த இரட்டைக்கொலை பற்றி பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  தலைமறைவான தனசேகரனை பிடிக்க மாவட்ட எஸ்பி கௌதம்கோயல், தனிப்படைகளை அமைத்துள்ளார். டிஎஸ்பி தேன்மொழிவேல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், தனசேகரனை  தீவிரமாக தேடி வருகின்றனர். 14 வயது தம்பியுடன் பிளஸ்-2 மாணவியை அவரது சித்தப்பாவே கழுத்தறுத்து படுகொலை செய்த இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொலையுண்ட நவீனா, சுகன் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். அப்போது அந்த வண்டியில் இருந்து அவர்களது தாய் சித்ரா மற்றும் உறவினர்கள் இறங்கி வந்தனர். குழந்தைகளின் உடல்களை பார்த்து, சித்ரா கதறியழுதார். பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் பூ பறிக்க போகிறோம் எனக்கூறிவிட்டு, அப்பதானே போனாங்க. போன கொஞ்ச நேரத்துலேயே காத்திருந்து என் பிள்ளைகளை கழுத்தறுத்து போட்டுட்டானே எனக்கூறியபடி கதறியழுத்தார். இதனை கேட்டு மருத்துவமனையில் நின்றிருந்த மக்களும் கண்கலங்கினர்.