‘தாலியை கூட தந்துடுறேன்... இறப்பு சான்றிதழ் கொடுங்கையா’ கெஞ்சிய விதவை

செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் கேட்டு 11 மாதங்களாக அலைக்கழிக்கும் வருவாய்த்துறையினரிடம் தனது தாலியை கையூட்டாக வைத்துக் கொண்டு இறப்பு சான்றிதழ் வழங்குமாறு கேட்கப்பட்ட விதவைப் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இளநீர் குன்றம் கிராமத்தில் திலகவதி என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிரார். அந்த வீட்டின் பட்டா மாறுதல் செய்ய திலகவதியின் அப்பாவான பரசுராமனின், இறப்பு சான்றிதழ் கேட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த 11 மாதமாக தொடர்ந்து இறப்பு சான்றிதழ் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இதனை சிறிதும் பொருட்படுத்தாத வருவாய்த்துறையினர் ’இன்று போய் நாளை வா’ என்ற பதிலையே கூறியுள்ளனர். செய்வதறியாது திகைத்து நின்ற திலகவதி இறப்பு சான்றிதழ் வழங்க அலுவலர்கள் கையூட்டு எதிர்பார்ப்பதாக நினைத்துக் கொண்டு இன்று வழக்கம்போல் வந்த திலகவதி தனது தாலியை கையூடாக பெற்றுக்கொண்டு என்னுடைய அப்பா இறப்பு சான்றிதழை வழங்குமாறு கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.
திருவண்ணாமலையில் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்து 11 மாதங்கள் ஆகியும் வரவில்லை..!!
— Kavi (@kavii_talks) May 13, 2023
இதனால் அப்பெண் "தாலியை கூட தந்துடுறேன்... இறப்பு சான்றிதழ் கொடுங்கையா" என கெஞ்சியது வேதனை....!!#DMKFailsTN
pic.twitter.com/5rDMakFG5d
மனுவை மீண்டும் பெற்றுக் கொண்ட வருவாய்த் துறையினர் மீண்டும் இம்மனுமீது உரிய விசாரணை எடுப்பதாக தெரிவித்து விதவைப் பெண் திலகவதியை திருப்பி அனுப்பி உள்ளனர். தனது அப்பாவின் இறப்பு சான்றிதழ் கொடுக்க கையூட்டாக பெண் ஒருவர் தனது தாலியை மனுவில் வைத்து கொடுத்த சம்பவம் செய்யாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இது போன்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கையூட்டாக தாலியை கொடுக்க சென்ற சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் உரிய விசாரணை செய்து அந்தப் பெண்மணியின் தந்தையின் இறப்பு சான்றிதழை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.