#BREAKING : திருவள்ளூர் மாவட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யலாம்..!

 
armstrong death

ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் வீட்டின் அருகே  6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இன்று இறுதி மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், இயக்குனர் வெற்றிமாறன், பா ரஞ்சித் உள்ளிட்ட திரை பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவரது மனைவி பொற்கொடி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அவ்வழக்கினை நீதிபதி பவானி சுப்புராயன் விசாரித்தார். 

கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அவரது மனைவி சார்பில் அளித்த விண்ணப்பத்தை நிராகரிப்பதாக நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்தது. 

இதனைத் தொடர்ந்து நீதிபதி பவானி சுப்புராயன், "ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. நெருக்கடியான சிறிய சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மணிமண்டபம் கட்ட இடம் போதுமானதாக இருக்காது என்றும், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது. நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். வேறு நல்ல இடத்தை கூறுங்கள். வேறு பெரிய சாலை, பெரிய விசாலமான இடம் இருந்தால் கேட்டு சொல்லுங்கள். அதன் பிறகு வேண்டுமானால் உத்தரவு பிறப்பிக்கிறேன். தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்". என்று தெரிவித்து வழக்கினை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தொடங்கிய விசாரணையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சற்றுமுன் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி கூறியதாவது, கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும்.கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்யலாம்.பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலலகத்தில் மணி மண்டபம் கட்ட எந்த பிரச்னையும் இல்லை அரசு அனுமதியுடன் பெரம்பூர் கட்சி அலுவலுகத்தில் மணிமண்டபம் கட்டி கொள்ளலாம் எனவும் நீதிபதி பவானி சுப்பாராயன் தெரிவித்துள்ளார்