#BREAKING : நாதக பெண் நிர்வாகி சிறையில் அடைப்பு..!!
தாராபுரத்தில் அக. 2-ம் தேதி நாதக பேனர் வைத்தது தொடர்பாக கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பேனரை அகற்ற முயன்ற போலீசாரைத் தடுத்து, தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், காவல்துறையினரின் பணியைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அக்.4-ம் தேதி பரப்புரையின்போது முதலமைச்சர் ரோடு ஷோ சென்ற வழியில், நாதகவினர் இடையூறு செய்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட கார்த்திகா தற்போது சிறையில் உள்ளார்
தாராபுரம் தொகுதியில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, முதல்வர் விஜய் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி தாராபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றிருந்தார். இந்நிலையில், அதே இடத்தில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட நிலையில், அதனை நிராகரித்த காவல்துறையினர் காமராஜபுரம் பகுதியில் நாதகவினர் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கினர்.
ஆனால், அதனை மீறி, முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்த இடத்திலேயே, நாதகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாராபுரத்தில் ரோடுஷோ சென்ற பாதையில், உரிய அனுமதியின்றி நாதகவினர் பேனர் வைத்தனர்.
அதனை அகற்றுமாறு காவல்துறை தரப்பில் பலமுறை அறிவுறுத்தியும், பேனர் அகற்றப்படாததால் அதனை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும், நாதகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து, நாதகவினர் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, தாராபுரம் காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக நாதகவினர் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், காமராஜபுரம் பகுதியில் நாதகவின் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்த வழியாக குழந்தையுடன் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த தவெக தொண்டர் மீது நாதகவினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒரு வழக்கும், சமூக வலைதளத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பதிவிட்டதற்கு ஒரு வழக்கும் என மொத்தமாக ஐந்து வழக்குகள் நாதகவினர் மீது பதிவுப் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டது, அனுமதி பெறாத இடத்தில் பரப்புரை மேற்கொண்டு சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்படுத்தியது, கொலை மிரட்டல், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருகு சந்திரகுமார், விக்னேஷ் பாண்டியன், கந்தசாமி, கோவிந்தராஜ், சஞ்சய் காந்தி, இசை மதிவாணன், சூர்யா, ஷேக் பரித் ஆகிய 9 பேரை நேற்று (அக்டோபர் 20) தாராபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர்களை நேற்று இரவு தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இவர்களிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த விசாரணையில், காவல்துறை தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டது
.தொடர்ந்து, நாதக சார்பில் வழக்கறிஞர் நன்மாறன் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உமா மகேஸ்வரி, நாதக தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா உட்பட 9 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து, 9 பேரையும் காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகா, “நான் என்ன போதைப்பொருளா கடத்தினேன். தேர்தலில் நின்றது ஒரு குற்றமா? எங்கள் மீது பிணையில் வெளியில் வர முடியாத வழக்கு பதிந்துள்ளார்கள். என்னை பேசக்கூடாது என்கிறார்கள்” என்றுத் தெரிவித்துள்ளார்.

