#BREAKING : சென்னையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்..!

 
1

சென்னையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி 94 வயதில் காலமானார் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

 

பழம்பெரும் தமிழ் நடிகை சௌகார் ஜானகி (94) காலமானார்; சென்னை தனியார் மருத்துவமனையில் இதய நோய் பாதிப்பிற்காக சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர்பிரிந்தது.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பழம்பெறும் நடிகை சௌகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1931-ம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி பிறந்தவர் ஜானகி, தனது கலைப் பயணத்தை நாடக மேடையில் தொடங்கினார். நாடக உலகில் பெரும்பாலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், மேடைகளில் தான் தோன்றிய ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன்னுடைய தனித்திறமையை காட்டி ரசிகர்களால் கைதட்டுகளை ஜானகி பெற்றார். ‎திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே 300-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருந்தார்.

பின்னர் தெலுங்கில் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் கடந்த 1950ஆம் ஆண்டு வெளியான ’சவுகாரு’ திரைப்படத்தில் ஜானகி அறிமுகமானதால், அதன்பிறகு ’சௌகார் ஜானகி’ என அழைக்கப்பட்டார். அந்த படத்தில் ‎தெலுங்கு திரை மற்றும் அரசியல் உலகில் மாபெரும் நட்சத்திரம் என்.டி. ராமராவ் கதாநாயகனாக நடித்தார்.

தெலுங்கில் அறிமுகமானாலும், தமிழ், மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சௌகார் ஜானகி தொடர்ச்சியாக நடித்தார். தனது நீண்ட திரைப்பயணத்தில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மூத்த கலைஞர்களில் ஒருவராக திகழ்கிறார். புதிய பறவை, எதிர் நீச்சல், பாமா விஜயம், பார் மகளே பார், நீர்க்குமிழி, இரு கோடுகள் போன்ற வெற்றிப் படங்களில் தனக்கு கொடுத்திருந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

4 முதலமைச்சர்களுடன் நடித்த செளகார் ஜானகி

ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு முதல்வராக பதவி வகித்த என்.டி.ராமராவுடன் முதலில் படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் பதவி வகித்த எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் தமிழ் படங்களில் நடித்தவர் என்கிற பெருமைக்குரியவர் சௌகார் ஜானகி.

பத்மஸ்ரீ சௌகார் ஜானகி

நாடகம் மற்றும் சினிமா ஆகிய பொழுதுபோக்கு தளங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய சௌகார் ஜானகியின் கலைச் சேவையைப் பாராட்டி, இந்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.