#BREAKING பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. சினிமா உலகில் உச்ச நாயகியாக கோலோச்சியவர் நடிகை சரோஜா தேவி. 1960 முதல் 1970 காலகட்டங்களில் திரை உலகில் முன்னாடி நடிகையாக திகழ்ந்த அவர், தனது 50 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளால் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்ட சரோஜாதேவி, 1955 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படம் ‘மகாகவி காளிதாஸ் ’மூலம் திரையுலகில் கதாநாயகியாக சரோஜாதேவி அறிமுகமாகி இருந்தார். ராதா தேவி என்கிற தனது பெயரை திரையுலகிற்காக சரோஜா தேவி என மாற்றிக் கொண்டார்.

பின்னர் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான சரோஜாதேவி, 1959 ஆம் ஆண்டில் வெளியான கல்யாணப்பரிசு திரைப்படம் மூலம் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். இவர் அந்தக்காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர் உடன் 24 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன் , ரவிச்சந்திரன் உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். அந்தக்காலத்திலேயே நடிகர்களுக்கு இணையான சம்பளம் பெற்றவர் என்றும் சரோஜா தேவி கொண்டாடப்பட்டார்.

நாடோடி மன்னன் , கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, பார்த்திபன் கனவு , அன்பே வா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ள அவர், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் பல விருதுகளை பெற்றுள்ள சரோஜாதேவி , மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். 2008ல் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ஒன்றிய அரசின் தேசிய விருதை பெற்றிருந்தவர். 1997 இல் தமிழ்நாடு அரசு சார்பில் நடிகை சரோஜாதேவிக்கு எம்ஜிஆர் விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டிருந்தது. கன்னடத்து பைங்கிளி கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வந்த சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக , தனது 87வது வயதில் காலமானார். அவர்து மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


