#Breaking வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்..
ஆயுள் தண்டனை கைதியை சித்திரவதை செய்த புகாரில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த சிவகுமார், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையில் டிஐஜியாக இருந்த ராஜலக்ஷ்மியின் வீட்டிற்கு வேலை செய்வதற்காக சிவக்குமார் அழைத்துச் சொல்லப்பட்டிருக்கிறார். அப்போது ராஜலட்சுமி வீட்டில் இருந்து 4.25 லட்சம் பணம் , நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடியதாக கூறப்படுகிறது. தொடர்பாக விசாரணை நடத்தியதில் திருடிய பணத்தை கைதி சிவக்குமார் மண்ணில் புதைத்து வைத்திருந்ததாகவும், பின்னர் அந்த நகைகளை மீட்டதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தின்போது சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்கள் கைதி சிவகுமாரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த சிவகுமாரின் தாய், தனது மகனை திருடியதாகக் கூறி அவரை சித்திரவதை செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இதை தொடர்பாக வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் சிறைக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து அரசுக்கு வரும் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம்( செப். 10) காலை சிபிசிஐடி எஸ்.பி., வினோத் சாந்தாராம் தலைமையில் சென்னை டிஎஸ்பி சசிதர், சேலம் டிஎஸ்பி சென்னித் இளங்கோ மற்றும் வேலூர் சிபிசிஐடி ஆய்வாளர் இந்திரா உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் சேலம் மத்திய சிறைக்கு சென்று கைது சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நேற்று (செப்.11) வேலூர் சிறையிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்ததினர். இந்நிலையில் வேலூர் சரக டிஐஜி ராஜலக்ஷ்மி உள்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறையில் கைது சித்திரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து சிறைத்துறை டிஜிபி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், சென்னை சரக சிறைத்துரை டிஐஜி முருகேசன், வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.