#BREAKING : மக்களுக்கு அடுத்த ஷாக்..!! ரேஷன் கடைகளில் பாமாயில் பாக்கெட் விநியோகத்திற்கு இடைக்கால தடை..!!
தீபாவளி பண்டிகையையொட்டி 200 லட்சம் பாமாயில் டெண்டர் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பாமாயில் டெண்டர் ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதாக கே.டி.வி. ஹெல்த் புட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட டெண்டர் உத்தரவுக்கு நவம்பர் 2ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்களுக்கு ரேஷனில் பாமாயில் கிடைக்குமா என்பது சந்தேகம்.
தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த ஜூன் 5-ந் தேதி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது; செப்டம்பர் 8-ந்தேதி டெண்டர் திறக்கப்பட்டு, 4 நிறுவனங்களுக்கு பாமாயில் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யும் டெண்டர் ஒதுக்கீடு.
இதில், முதல் கட்டமாக 200 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை வருகிற 29-ம் தேதிக்குள் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு இந்த நிறுவனங்கள் விநியோகம் செய்ய கடந்த செப்.29-ம் தேதி உத்தரவிடப்பட்டது. விநியோகம் செய்ய வேண்டிய பாமாயில் பாக்கெட்டுகள் விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவில்லை என்று கூறி நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெண்டர் எடுத்துள்ள கேடிவி ஹெல்த் புட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், “200 லட்சம் பாக்கெட்டுகளை முதலில் விநியோகம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், 200 லட்சம் பாக்கெட்கள் விநியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள எம்ஜிஎம் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளும், 210 லட்சம் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள குமார் ஆக்ரோ நிறுவனம் 52 லட்சம் பாக்கெட்டுகளும், 180 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டிய இன்டகரேட் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளும், 360 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டிய எங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது விநியோகம் செய்ய வேண்டிய பாக்கெட்டுகள் அடிப்படையில் சரியான விகிதாசார அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 360 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள எங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்றும் 150 லட்சம் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டி எம்ஜிஎம் ஆயில் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் எனறு உத்தரவிட்டது சரியானதல்ல. எனவே, பாமாயில் விநியோகம் தொடர்பாக கடந்த செப்.29-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விகிதாசார அடிப்படையில் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய உத்தரவிடும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சரவணன் ஆஜராகி வாதிட்டார். அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, பாமாயில் விநியோகம் தொடர்பாக செப்.29-ம் தேதி நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை நவ.2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

