#BREAKING : தொடங்கியது செயற்குழு கூட்டம்..! திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு!

 
MK Stalin

திமுகவின் முதல் முக்கிய செயற்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் அமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

மதிமுகவில் இருந்து விலகி திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வனும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இது கட்சிக்குள் மேற்கொள்ளப்பட உள்ள அடுத்தகட்ட அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவின் கட்சி கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ள தலைமை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தற்போதுள்ள மாவட்ட அமைப்புகளில் மாற்றங்களை கொண்டு வருவதுடன், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்க உள்ளது.

இதனிடையே, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய மற்றொரு குழுவும் திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பாக ஆய்வு செய்து, தனது அறிக்கையை தலைமையிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.