#BREAKING: டாஸ்மாக் ஊழியர்களின் ஸ்டிரைக் திடீர் வாபஸ்..!!

 
tasmac

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளிலும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக கூறப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

மேலும், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. விதிமீறல்களை தடுக்கத் தவறும் உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களை ஏற்றி இறக்கும் கூலி, கடை வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் தொடர்பான பிரச்சினைகள் தங்கள்மீது சுமத்தப்படுவதாகவும், ஆனால் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக கூறி ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறும் தவறுகளுக்கு அடிமட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலிகடா ஆக்கப்படுவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

பல ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இதுவரை பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை என்பதும் தொழிற்சங்கங்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

இதுதொடர்பாக பல ஆண்டுகளாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் முந்தைய அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய அரசு டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வரும் நிலையில், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த டாஸ்மாக் பணியாளர் சங்கம் தனது முடிவை வாபஸ் பெற்றுள்ளது. காலமுறை ஊதியம், ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அச்சங்கம் போராட்டம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அமைச்சர் விக்னேஷுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், கடைகள் வழக்கம் போல் இயங்கும் என கூறியுள்ளது. இது, மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.