#BREAKING : தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம்: ஜன்னல் வழியே எகிறி குதித்து தப்ப முயன்ற நிஷாந்த்.. மடக்கி பிடித்த போலீஸ்!
மதுரை காளவாசல் பைபாஸ் சாலை, நேரு நகர் நேதாஜி மெயின் ரோட்டில் செயல்பட்டு வந்த தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத் திட்டமிட்டு தனி ஒருவனாகக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிஷாந்த் கைது.
தனிஷ்க் நகை கடை கொள்ளையன் நிஷாந்த் சிக்கியது எப்படி?
ஆம்னி பேருந்து ஓட்டுநரின் சாதுர்யத்தால் சிக்கிய நிஷாந்த்; ஜன்னல் வழியே தப்ப முயன்றபோது அதிரடி கைது!
கடந்த நான்கு நாட்களாக வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று காவல்துறையினரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிஷாந்த், நேற்று (நவம்பர் 15) பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் இருந்த நிஷாந்தை அடையாளம் கண்டுகொண்ட அந்தப் பேருந்தின் ஓட்டுநர், இது குறித்து உடனடியாக அதியமான்கோட்டை காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கொடுத்துள்ளார்.
ஓட்டுநர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், சேஷம்பட்டி அருகே அந்த ஆம்னி பேருந்தைத் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த நிஷாந்த், பேருந்தின் ஜன்னல் வழியாக குதித்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
ஆம்னி பேருந்து ஓட்டுநரின் சாதுர்யமான நடவடிக்கையாலேயே பல நாட்களாகப் போக்குக்காட்டி வந்த நிஷாந்த் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட நிஷாந்திடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

