#BREAKING : தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

 
11

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 10) சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கென தனித்தீர்மானம் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டுவருகிறார். 

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்று தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடப்படுவது தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் பேச உள்ளனர். தீர்மானத்தின் மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர், சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீதான உரையை முதலமைச்சர் ஆற்றிக்கொண்டு இருக்கிறார்.

தமிழ் என்று கூறினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதல் இடத்தில்தான் இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை என பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். 

 ”மொழி என்பது எப்போதும் தொடர்புக்கான ஒன்றுதான். உலகத்தில் இருக்கிற எல்லா மொழிகளுக்கும் இது பொருந்தும். இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், நம்முடைய தமிழ் அப்படியல்ல. தமிழ் வெறும் ஒரு மொழி மட்டுமல்ல. பேசுகிறபோது வெளிப்படும் ஓசை மட்டுமல்ல. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, அது நம்முடைய உயிர். அது நம்முடைய உணர்வு.

நம்மைப் பெற்ற தாயை நினைக்கும்போதெல்லாம், நம்மை அறியாமலேயே ஒரு பாசமும், ஒரு உணர்வும், ஒரு வீரமும், ஒரு உறவும் நம்முடைய உள்ளுக்குள் தோன்றும். அதேபோல, இன்னும் ஒரு படி மேலே போய்கூட சொல்லலாம். தமிழ் என்று சொன்னாலே எப்படி இருக்கும்? என்ன ஆகும்? என்று சொல்ல முடியாத அளவுக்கு, அது நம்முடைய உணர்வோடு கலந்திருக்கிறது.

தாய் எப்படி ஒரு மிகப்பெரிய புனிதமோ, அதேபோலத்தான் தாய்மொழியும் புனிதமானது. அதிலும் நம்முடைய தாய்மொழியான தமிழ் மொழி என்று சொல்லும்போது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தாய்மொழி உணர்வு பிறந்துவிடுகிறது.

நம்முடைய தாயே நமக்கு மிகப்பெரிய புனிதம் என்றால், நம்முடைய எல்லோருக்குமான தமிழ்த்தாயைப் பற்றி சொல்ல வேண்டுமா? தாயைப் போற்றுகிற, தாயை வாழ்த்துகிற தமிழ்நாட்டு மண்ணில், தமிழ்த்தாய் வாழ்த்தை பாடாமல் இருப்போமா?

நம்முடைய தமிழ்த்தாயை வாழ்த்துவதற்காக, 1891 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மனோன்மணியம் என்னும் நாடகத்தில் பேராசிரியர் சுந்தரனார், நம்முடைய தமிழ் மொழியைத் தமிழ்த்தாயாக உருவகப்படுத்தி உயர்வாகப் பாடினார். இந்தியத் துணைக்கண்டத்தை, இந்திய ஒன்றியத்தை, ஓர் அழகிய முகமாக உருவகப்படுத்திய மனோன்மணியம் சுந்தரனார், அந்த முகத்தின் நெற்றியில் வைக்கப்படும் திலகம்தான் தமிழ்நாடு என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

இந்தியாவின் நெற்றியில் இருக்கும் அந்தத் திலகம் எப்படி தனித்துவமானதோ, அதுபோல அந்தத் திலகத்தின் நறுமணம் உலகம் முழுவதும் பரவ வேண்டும். தமிழின் புகழ், உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று அவர் பாடினார். உண்மைதானே அது.

இன்று தமிழ் பேசுகிற மக்கள் இல்லாத நாடுகளே மிகவும் குறைவு. தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது? என்று கேட்கும் அளவுக்கு, உலகம் முழுவதும் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள்.

இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதிய கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1970-களில் இருந்து நிகழ்ச்சிகளிலும், கல்வி அனைத்து அரசு நிறுவனங்களிலும் "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்" முதலில் பாடப்படுவது மரபுத்தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆகவே, "தமிழ்த்தாய் வாழ்த்து" தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு உள்ளிட்ட பொது அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது."

இந்த தீர்மானத்தின் மீது அனைவரும் ஆதரவு தர வேண்டும் என முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.

அதனால் மீண்டும் ஒருமுறை நாம் பெருமையோடு சொல்லலாம்..

தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல.

தமிழ் ஒரு பண்பாடு.

தமிழ் ஒரு நாகரிகம்.

தமிழ் நம்முடைய அடையாளம்.

தமிழ் நம்முடைய உயிர்

 

தமிழ் என்று கூறினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதல் இடத்தில்தான் இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை என பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். 

 

முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது உரையாற்றிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்ற தீர்மானத்திற்கு திமுக சார்பாக ஆதரவு தெரிவித்தார்.

முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் பாடப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தனித்தீர்மானத்திற்கு அதிமுக சார்பாக ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

முதலமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு ஆதர்வு தெரிவித்து உரையாற்றிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர்களின் உரிமை என்றும், முதலமைச்சர் கொண்டுவந்திருக்கின்ற தீர்மானத்தை 8.5 கோடி தமிழர்களால் ஏற்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் சார்பாக தீர்மானத்தை வரவேற்று, ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்ற முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், பாமக சார்பாக தீர்மானத்திற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

முதலமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவாக பேசிய சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்திற்கு சிபிஐ சார்பாக ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது என தீர்மானத்தில் கூற வேண்டும் என குறிப்பிட்டார்.