#BREAKING : தமிழக சட்டசபை நாளைக்கு ஒத்திவைப்பு..! இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் நடந்த 2 முக்கிய நிகழ்வுகள்..!
சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவான விஜய்யின் தவெக, பின்னர் பிற கட்சிகளின் ஆதரவை பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்துள்ளது.தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (மே.10) நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.பின்னர், அக்கட்சியை சேர்ந்த என். ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார், வெங்கட்ரமணன், கீர்த்தனா உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், தவெக தலைமையில் 17வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
தமிழக சட்டசபையில் இன்று (மே 11) புதிய எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியில், உளமாற உறுதி கூறுகிறேன் என்றும், கடவுள் அறிய உறுதி கூறுகிறேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த இரண்டு வாசகத்தில் எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பம் படி ஒரு வாசகத்தை குறிப்பிட்டு பதவியேற்றுக்கொண்டனர்.
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.
ஒன்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்களை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தவெகவை சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தான் சான்றிதழ் கொண்டுவரவில்லை என்றார். இதையடுத்து, அவர் பதவியேற்க சட்டமன்றச் செயலாளர் அனுமதி மறுத்தார். இதனால் அவர் மீண்டும் தனது இருக்கைக்கு சென்றார். வெற்றி சான்றிதழை அவர் நாளை (மே 12) கொண்டு வந்து எம்எல்ஏவாக பதவியேற்பார் எனத் தெரிகிறது.எம்எல்ஏவாக பதவியேற்பதற்கு சம்பந்தப்பட்ட தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளே இதுதொடர்பான அறிவுறுத்தல் புதிய எம்எல்ஏக்களுக்கு தரப்பட்டிருக்கும்.இருந்தபோதிலும், தவெக அமைச்சர் கீர்த்தனா, வெற்றி சான்றிதழை கொண்டு வராதது பேசுபொருளாகியுள்ளது.
சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிறைவு; அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் இன்று பதவியேற்கவில்லை
மற்றொரு விஷயம் அதிமுகவில் முன்னாள் முதல்வர் இபிஎஸ்க்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், வேலுமணி ஆகியோர் போர்க்கொடி உயர்த்திய எம்எல்ஏக்களை ஒன்றாக திரட்டி தனி ஆலோசனை நடத்தினர்.இதில், சட்டசபை குழு தலைவர் பதவிக்கு இனி இபிஎஸ் வரக்கூடாது.விஜய் கட்சியுடன் இணக்கமாக இருக்கலாம், கூட்டணி சேரலாம் என்பது அவர்கள் வாதம்.அதை இபிஎஸ் ஏற்க மறுத்து விட்டார். இதனால் இரு கோஷ்டியாக அதிமுகவினர் பிரிந்துள்ளனர். ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டிக்கு எதிராக ஆள் திரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதல், இன்றைய எம்எல்ஏ பதவியேற்பு நிகழ்ச்சியில் வெட்டவெளிச்சமாக தெரிந்தது. வழக்கமாக இபிஎஸ் வரும்வரை காத்திருந்து அவருடன் சட்டசபைக்குள் நுழையும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் இன்று தனித்தனியாக சட்டசபைக்குள் சென்றனர்.இபிஎஸ் உடன் தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பணன், ஓஎஸ் மணியன் உள்ளிட்ட வெகு சிலரே உடன் வந்தனர். தோல்வி அடைந்த முனுசாமி, உதயகுமார் உள்ளிட்டோரும் இபிஎஸ் உடன் வந்தனர். இவர்களுக்கும் முன்னரே லீமா ரோஸ் உள்ளே சென்று விட்டார்.இபிஎஸ் உள்ளே சென்றபிறகு வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வந்தனர். அவர்களுடன் சில எம்எல்ஏக்களும் வந்தனர். அப்போது அங்கு வேறு சில எம்எல்ஏக்களும் காத்திருந்தனர். அவர்கள் வேலுமணி, விஜயபாஸ்கரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
இப்படி தனித்தனியாக சட்டசபைக்கு சென்ற இரு கோஷ்டிகளும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. அதிமுக இரு கோஷ்டியாக பிளந்திருப்பது இந்த செயல்பாடுகளால் தெரியவந்துள்ளது.
நாளை காலை 9.30 மணிக்கு அவை மீண்டும் கூடி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் எனக் கூறி அவையின் இன்றைய அலுவல்கள் நிறைவு.மேலும் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிறைவடைந்தது...ஆனால் அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் இன்று பதவியேற்கவில்லை.
மேலும் நாளை காலை 9.30 மணிக்கு அவை மீண்டும் கூடி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் எனக் கூறி அவையின் இன்றைய அலுவல்கள் நிறைவு பெற்றது

