#BREAKING கவரைப்பேட்டை ரயில் விபத்து - 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்!
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மைசூரு- தர்பங்கா பாகமதி விரைவு ரயில் இரவு 8.30 மணியளவில் பொன்னேரியை கடந்து கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக, லூப் லைனுக்குள் நுழைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் வேகமாக மோதியதால் ரயில் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த ரயில் விபத்தில் 13 பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த விபத்து குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக உயர்மட்ட விசாரணைக் குழுவும், என்.ஐ.ஏ அதிகாரிகளும் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கவரப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இன்று மாலை 13 பேரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு, லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட் , மோட்டார் மேன், கவரப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி, கவரப்பேட்டை சிக்னல் ஆபரேட்டர்கள் இரண்டு பேர் உள்பட 13 ஊழியர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை கோட்டம் வேளாளர் சம்மன் அனுப்பியுள்ளார். விசாரணைக்கு பிறகு ரயில் விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்