#BREAKING: மேல்செங்கத்தில் கோர விபத்து! அரசுப் பேருந்து நடத்துநர் பலி - 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!
திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கத்தில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதியதில் நடந்துநர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்(57] பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் பகுதியில் உள்ள பெங்களூரு – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி காய்கறிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மேல்செங்கம் அருகே வந்தபோது லாரியின் டயர் திடீரென பஞ்சர் ஆனதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநர் லாரியை சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், சாலையோரத்தில் பழுதாகி நின்றிருந்த லாரியை கவனிக்காமல் வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதியில் இருந்த நடத்துநர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த மற்றும் லேசான காயமடைந்து அலறினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
காயமடைந்த பயணிகளை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த மேல்செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்துக்குள்ளான அரசுப்பேருந்து திருவண்ணாமலை பணிமனையைச் சேர்ந்தது என்பதும், பேருந்தை செந்தில்குமார் (56) என்பவர் ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், உயிரிழந்த நடத்துநர் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் (57) என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்து தொடர்பாக மேல்செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

