#BREAKING : தமிழகத்தில் பரபரப்பு..! மீண்டும் அரங்கேறியதா ஒரு லாக் அப் மரணம்..?
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாசலம் என்பவரைத் தெற்கு காவல் நிலைய போலீசார் அண்மையில் விசாரணைக்காக அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பிணையில் வெளியே வந்த அவருக்குத் திடீரெனக் கடுமையான உடல்நலக்குறைவும் தலைவலியும் ஏற்பட்டதால், உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் இருந்தபோது அருணாசலம் பேசிய வீடியோ பதிவில், “காவல் நிலையத்தில் வைத்துப் போலீசார் தன்னை லத்திகளால் மிகக் கொடூரமாகத் தாக்கினர் என்றும், தலையிலும் உடலிலும் பலத்த காயங்களை ஏற்படுத்தினர்” என்றும் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உறவினர்களும் நண்பர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பாகத் திரண்டு காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிராகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறை சித்திரவதையால் மட்டுமே வாலிபர் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டியுள்ள குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உடலை வாங்க மறுத்து வருகின்றனர். மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் தலைவர்களும் இச்சம்பவத்திற்குப் பலத்த கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலத்தை அடிக்கவில்லை என்றும் அவரது மரணம் லாக் அப் மரணம் இல்லை என்றும் டவுண் டிஎஸ்பி சுனில் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் கைதான அன்றையே அருணாச்சலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்கு அளித்தோம் என்றும் டிஎஸ்பி சுனில் கூறியுள்ளார்.
காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அருணாச்சலத்தை மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அங்கு மீண்டும் மயங்கி விழுந்தார். கைது செய்யப்பட்ட அன்றைய தினமே அருணாச்சலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்கு அளித்தோம். மயங்கி விழுந்த அருணாச்சலத்தை பெற்றோர் மற்றும் காவலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அருணாசலத்தின் தலையில் கட்டி இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அருணாசலத்தை அடிக்கவில்லை, இது லாக்-அப் மரணம் இல்லை” என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தெரிவித்துள்ளார்.

