#BREAKING: உங்க அக்கவுண்ட்டுக்கு ரூ.10,000 வரப்போகுது.. அதிமுகவின் 3-ம் கட்ட வாக்குறுதி பட்டியல் இதோ!
சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்த பொதுச் செயலாளர் இபிஎஸ், ஜெயலலிதா பிறந்த நாள் முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் உருவச்சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவித்தார். பின்னர் அதிமுகவின் 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இபிஎஸ் வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; ஸ்டாலின் தலைமையிலான நிர்வாக திறனற்ற திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் விலைவாசி விஷம் போல ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே போல திமுக ஆட்சி அமைந்த பின்னர் சொத்துவரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டன. இதனால் மக்களின் அன்றாட தேவைகளுக்கான குடும்பச்சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.எனவே மக்களின் சுமையை குறைக்கும் வகையில், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணை தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் (இந்த கருணைத்தொகையானது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்).
வேலையற்றவர்களுக்கு உதவிவேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.2000, பிளஸ் 2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
மீன்பிடி தடைக்காலங்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகை ரூ.8000. இந்த தொகை ரூ.12,000 உயர்த்தி வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கலன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்ந்து ரூ.1000 வழங்கப்படும்.
நெசவாளர்களுக்குகைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
நிதித்துறையை சேர்ந்தவர்கள் மூலம் எந்தெந்த வகைகளில் நிதியை பெருக்கி, நலத் திட்டங்களை வழங்க முடியுமோ அப்படி வழங்குவோம். நிபுணர்கள் மூலமாக எந்தெந்த துறைகளில் வரியை உயர்த்தி, நாங்கள் அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்த முடியுமோ அப்படி செயல்படுத்துவோம்.இந்த ஆட்சியில் மக்களின் நிலைமை வெண்டிலேட்டரில் வைக்க வேண்டிய சூழலுக்கு போய்விட்டது. ஆகவே முதலில் மக்களை காப்பாற்ற வேண்டும். விலைவாசி அதிகரித்து விட்டது. அதில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற அந்த அடிப்படையில் தான் இந்த தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

