#BREAKING : டாஸ்மாக் ஊழல் வழக்கு - ரத்தீஷுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்..!

 
Q

தமிழகத்தில் நடைபெற்று வரும் டாஸ்மாக் ஊழல் வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் டி.ஆர். ரத்தீஷுக்கு (ரத்தீஷ் ராஜ் சண்முகவேல்) இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் (Red Corner Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், பார் உரிமம் வழங்குதல் மற்றும் பணியிட மாற்றம் ஆகியவற்றில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை (ED) மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விசாரணை நடத்தி வருகின்றன.

முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் ரத்தீஷ், மதுபான வகைகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் பார் டெண்டர்களில் அதிகார மையமாகச் செயல்பட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக கடந்த 2025-ம் ஆண்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டில் பதுங்கியுள்ள ரத்தீஷை சட்டத்தின் பிடியில் கொண்டு வரும் வகையில், கடந்த 2026 ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் (Look Out Circular) பிறப்பிக்கப்பட்டது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதற்காகத் தற்போது சர்வதேச காவல்துறையான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், இந்த விசாரணை நடவடிக்கைகள் குறித்து இருவேறு அரசியல் நிலைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் நடத்தப்பட்ட சோதனைகள் முழுக்க முழுக்கச் சட்டப்பூர்வமானவை என்றும், போலி ஆவணங்கள் மூலம் பெரும் நிதி முறைகேடு நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசால் அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக தரப்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.