#BREAKING : திருச்செந்தூரில் தரிசனத்திற்கு பணம் வாங்கிய அர்ச்சகர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ரமேஷ் அதிரடி..!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
இந்த நிலையில், அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பது தொடர்பாக வந்த புகார்களின் உண்மைத்தன்மையை கண்டறிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிகாலை 5 மணி அளவில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார். அப்போது அவர் தனது காரை கோயிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு, முகக்கவசம் மற்றும் டி சர்ட் அணிந்து சாதாரண பக்தர் போல் கோயிலுக்குள் சென்றார்.
கோயிலுக்குள் அமைச்சர் ரமேஷ் வந்த நிலையில் உடன் வந்திருந்த அவரது உதவியாளர்களில் ஒருவர், விரைவாக சாமி தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும்? என்று அங்கிருந்த அர்ச்சகர்களிடம் கேட்டுள்ளார். வந்திருப்பவர் அமைச்சர் என்று தெரியாத அர்ச்சகர்கள், தலைக்கு ரூ. 1,000 வீதம் மொத்தம் 4 பேருக்கு ரூ. 4,000 லஞ்சமாக கேட்டுள்ளனர்.
அப்போது கையில் ரொக்கமாக பணம் இல்லை என்று கூறிய அமைச்சர் ரமேஷ், அர்ச்சகர்களில் ஒருவரின் ஜிபே கணக்கிற்கு ரூ.4,000 அனுப்பி வைத்துள்ளார். பின்னர், டிஜிட்டல் ஆதாரத்துடன் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்களை அமைச்சர் ரமேஷ் கையும் களவுமாகப் பிடித்தார். இதனால், திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அமைச்சர் ரமேஷ் முறைகேட்டில் சிக்கிய அர்ச்சகர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அறநிலையத் துறை ஊழியர்களை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை கடுமையாக எச்சரித்தார். பின்னர் அவர்களிடம் விளக்கக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடமிருந்து சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் மன்னிப்பு கடிதம் பெறப்படவில்லை என்றும், நடந்த சம்பவம் குறித்து விளக்க கடிதம் மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கோயில் நிர்வாகத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில் எந்தவித பாகுபாடும் காட்டப்படாது எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 பேர் டிஸ்மிஸ் செய்ய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அர்ச்சகர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சண்முகவிலாச மண்டபம் வாயிலில் பணம் பெற்ற அர்ச்சகர் அய்யப்பன் கோயிலுக்குள் பணி செய்யத் தடை; மறு உத்தரவு வரும் வரை அர்ச்சகர் அய்யப்பன் திருச்செந்தூர் கோவிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது .அர்ச்சகரோடு இணைந்து உடந்தையாக இருந்த 2 பாதுகாவலர்கள் பணி நீக்கம்; முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்டதிற்காக 2 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

