#BREAKING : இந்த தேதிக்குள் பொங்கல் பரிசு வழங்கப்படும் - அமைச்சர் காந்தி..!
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 ரொக்கம் கொடுக்கப்பட்டது. அதுவே இதுவரை கொடுக்கப்பட்ட அதிகபட்ச ரொக்கம் ஆகும்.
இதைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரொக்கம் தரப்படாமல் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் வழங்காமல் இருந்தது பல விமர்சனங்களை எழுப்பியது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இதுவரை வழங்காத ரொக்கம் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ரூ.5000 வழங்க மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மகளிர் உரிமை தொகை மாதம் வழங்குவதால் நிதி நெருக்கடி சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார் . தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு தற்போது தயாராக உள்ளது ,அதன் விநியோகம் விரைவில் தொடங்கும் வரும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என தெரிவித்தார் .
ஜனவரி 10ஆம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்க வேண்டும் என அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்படி பார்த்தால் ரொக்க பணம் வழங்கப்படுவதாக இருந்தால் அது பொங்கல் தொகுப்போடு சேர்த்து தான் வழங்கப்படும். எனவே ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகமும் , ஜனவரி இரண்டாம் வாரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை விநியோகமும் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


