#BREAKING : செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து நீதிபதி திடீர் விலகல்..!

 
1

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகளில் முன் ஜாமீன் கேட்டு, செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக முன்பு ஆஜராகியிருந்ததால், தற்போதைய விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி மோகனா அறிவித்துள்ளார். இதையடுத்து இந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது.


கடந்த 2021-2025-ஆம் ஆண்டு காலகட்டத்தில், திமுக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்த காலகட்டத்தில், டாஸ்மாக் நிறுவனங்களுக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார்களுக்கு உரிமம் வழங்கியது, ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் முறைகேடுகள் செய்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தள்ளுபடி செய்தார்.இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் அவசர வழக்காக செந்தில் பாலாஜி தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தலைமை நீதிபதி அமர்வில் உள்ள நீதிபதி மோகனா வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக வழக்கறிஞராக இருந்தபோது செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகியுள்ளதால், தான் விசாரணை அமர்வில் இருப்பது சரியாக இருக்காது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா பக்சி ஆகியோர் மட்டும் முன் பிணை கோரிய மனுவை விசாரிக்கவுள்ளனர்.