#BREAKING : பத்ரிநாத் அருகே ஹெலிகாப்டர் 6 பேருடன் மாயமாகி விபத்து – 6 பேரைத் தேடும் பணி தீவிரம்..!

 
1

உத்தரகண்டின் பத்ரிநாத்திலிருந்து ஃபாட்டா நோக்கிச் சென்ற 'ட்ரான்ஸ் பாரத் ஏவியேஷன்' நிறுவனத்தின் ஹெலிகாப்டர், சமோலி மாவட்டத்திலுள்ள ஜோஷிமத் அருகே விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது. விமானி உட்பட 6 பேர் காணாமல் போயுள்ளனர். சாயி கிராமத்திற்கு அருகில் ஹெலிகாப்டர் விழுந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பெய்யும் மழை மற்றும் அடர்ந்த மேகமூட்டத்தால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

இந்த ஹெலிகாப்டரில் விமானி மற்றும் 5 பக்தர்கள் பயணித்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

ஜோஷிமத் அருகே உள்ள சாயென் (Chaien) கிராமத்தின் எல்லைப் பகுதியில் இருந்து புகை மூட்டம் எழுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற அச்சத்தில் சமோலி மாவட்ட நிர்வாகம், மீட்புக் குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹெலிகாப்டரில் இருந்த 6 பேரின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. மற்றொரு ஹெலிகாப்டர் மூலமாக வான்வழியாகவும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனச் சமோலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.