#BREAKING : சாக்லெட் சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலை பள்ளியில், இன்று காலை பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாக்லேட் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவர்கள் 18 பேர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் வழக்கம்போல வகுப்புகள் தொடங்கிய நிலையில், 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக வகுப்பு தோழர்களுக்கு சாக்லேட்டுகளை வழங்கியுள்ளார்.
சாக்லேட்டை வாங்கி சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக சில மாணவர்கள் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததால் பள்ள வளாகத்தில் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவியது. மாணவர்களின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள், உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட 18 மாணவர்களையும் மீட்டுச் செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழு, அவர்களுக்கு 'ஃபுட் பாய்சனிங்' எனப்படும் உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தது. உடனடியாக மாணவர்களுக்குக் குளுக்கோஸ் மற்றும் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தற்போது அனைத்து மாணவர்களும் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பெற்றோர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந் செஞ்சி போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மாணவர் விநியோகித்த சாக்லேட்டுகள் காலாவதியாகி ஓராண்டுகள் ஆனது தெரியவந்துள்ளது. இவ்வளவு காலம் கடந்த காலாவதியான சாக்லேட்டுகள் கடைகளில் விற்கப்பட்டதா அல்லது தரம் குறைந்த போலி சாக்லேட்டுகளா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சாக்லேட் சாப்பிட்டு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதால், பெற்றோர்கள் பதற்றத்துடன் மருத்துவமனையில் குவிந்தனர்.

