#BREAKING எட்டாக் கனியாகும் தங்கம் , வெள்ளி.. வரலாறு காணாத அளவு விலை உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாரு காணாத அளவு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டிவந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுவருவதே நிதர்சனம். மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதன்படி பட்ஜெட்டுக்கு பிறகான 5 நாட்கள் தங்கம் மளமளவென சவரனுக்கு ரூ.5ஆயிரம் வரை சரிந்தது. ஆனால் அதன்பின்னர் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
அதிலும் கடந்த 2 வாரங்களில் கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ரூ. 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி கடந்த 13ம் தேதி சவரனுக்கு ரூ. 960ம், கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு 480 ரூபாயும், கடந்த சனிக்கிழமை அன்று சவரனுக்கு 600 ரூபாயும், கடந்த 2 நாட்களில் தலா 160 ரூபாயும் என தொடர்ந்து ஏற்றம் கண்டது. அந்தவகையில் நேற்றைய தினம் ஒரு கிராம் ரூ. 7000க்கும், ஒரு சவரன் ரூ. 56,000 என்கிற புதிய உச்சத்தில் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு மேலும் ரூ.480 உயர்ந்துள்ளது. இதன்மூலம் தங்கம் ஒரு சவரன் ரூ. 56,480 என்கிற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பது, நகைப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.